தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவிற்கு உள்பட்ட கும்பக்கரை அருவிக்கு மேல் வெள்ளகெவி மலைக்கிராமம் உள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால், கடந்த 1980ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கும்பக்கரையில் இருந்து வெள்ளகெவி கிராமத்திற்கு சாலைப் பணிகள் மேற்கொள்ள 97 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கினார்.
அதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. ஆனால் கடந்த 40 அண்டுகள் ஆகியும் இந்த சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டள்ளன. இதனைக் கண்டித்து வெள்ளகெவி மலைக்கிராம மக்கள் சுமார் 50 பேர் இன்று (நவ.07) கும்பக்கரை அருவியில் உள்ள தேவதானப்பட்டி வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது, "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொடைக்கானல் செல்வதற்கு கும்பக்கரை, வெள்ளக்கெவி மலைப்பாதையை தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் காபி, ஏலம், ஆரஞ்சு மற்றும் அவகேடோ உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகிறோம். ஆனால், அவசரத் தேவைக்கு மருத்துவமனைக்கு கூட எங்களால் செல்ல முடியவில்லை. எனவே சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம்" என்றனர்.
பின்னர் தங்களது கோரிக்கை மனுக்களை தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !