கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்குப் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக அரிசி வாங்கும் குடும்ப அட்டைதார்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, பருப்பு சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்கள் தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
அதனைத் தொடர்ந்து இதனை வாங்க மக்கள் கூட்டமாக முண்டியடித்து வருவதற்கு வாய்ப்புள்ளதால் அந்தந்த நியாய விலைக் கடைக்குட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு நேரடியாக வீட்டில் சென்று டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு நியாய விலைக் கடையில் நாள் ஒன்றுக்கு 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே சமையல் பொருள்கள் தொகுப்பு, நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர் இந்நிலையில் தற்போதைய கோடை கால வெய்யிலின் கடுமையிலிருந்து பெண்கள், வயது முதிர்ந்தவர்களை காக்கும் பொருட்டு தேனி அல்லிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் இயங்கும் நியாயவிலைக் கடை எண் ஒன்றில். நிவாரண தொகை, சமையல் பொருள்கள் தொகுப்பினை வாங்க வரும் குடும்ப அட்டை தாரர்களுக்கு இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வாடகைக்கு இருக்கைகள் கொண்டுவரப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. பயனாளர்களை இருக்கையில் அமரவைத்து நிவாரணம் வழங்கிய நியாவிலைக் கடை ஊழியர்களை பொதுமக்கள் மனதார வாழ்த்தி நெகிழ்ச்சியுடன் நிவாரணத்தை பெற்றுச் சென்றனர்.