தேனி மாவட்டம் மேலமஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (28). கூலி வேலை செய்துவந்த இவருக்குத் திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த பாபு (36) என்பவருக்கும், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
நண்பர்களான இருவரும் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு வந்த பாபுவின் தந்தை வடிவேல், இருவரையும் கண்டித்துள்ளார்.
மேலும், பாபுவின் தந்தையிடம் உங்கள் மகன்தான் என்னை கெடுக்கிறார் என்று ராஜேஷ் சொல்லியதாகக் கூறப்படுகிறது. பின்னர், பாபுவை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அதே பகுதிக்கு வந்த பாபு, தந்தையிடம் என்னைப் பற்றி ஏன் தவறாகக் கூறினாய் என்று தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ராஜேஷ், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இதற்கிடையில், சிகிச்சையிலிருந்த ராஜேஷ் நேற்றிரவு (மார்ச் 1) உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷின் உறவினர்கள், ராஜதானி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பாபுவை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாபுவை விரைவில் கைதுசெய்வதாக உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜதானி காவல் துறையினர், பாபுவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மணப்பாறையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை - 5 பேர் கைது