தேனி: தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் காட்வின் மேஷாக் என்பவரது மனைவி மகாராணி (42). இவரும், திண்டுக்கல் மாவட்டம், தாலுகா அலுவலகச் சாலையை சேர்ந்த பாபுராஜ் மனைவி டெய்சிராணி (47) என்பவரும் சிறு வயதில் மேகமலையில் பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டெய்சிராணி, மகாராணியிடம் அறிமுகமாகி, தற்போது திண்டுக்கல்லில் வசிப்பதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, “திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் எனக்கு தெரியும். அவருக்கு வெளிநாட்டில் இருந்து நிறைய பணம் வந்துள்ளது. ஆனால், அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால், அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வரியைச் செலுத்த பணம் கொடுத்தால், பணம் வந்தவுடன் பல மடங்கு திருப்பி தருவதாக” கூறியுள்ளார். இதனை நம்பி, அவர் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பியுள்ளார், மகாராணி.
இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடி அருகே கீழத்திருவிழாப்பட்டியை சேர்ந்த ராபர்ட் (45) என்பவர் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருப்பதாகவும், அவருக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும், அதற்கும் அரசுக்கு வரி செலுத்த ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்தால், அதை 3 மடங்காக திருப்பிக் கொடுப்பதாக டெய்சிராணி கூறியுள்ளார். அதையும் நம்பி ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் பெற்றுக் கொண்டு, டெய்சிராணி பணத்தை திருப்பித் தராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகாராணி, இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், மகாராணியை நம்ப வைப்பதற்காக டெய்சிராணி மற்றும் ராபர்ட் ஆகியோர் பல வழிகளைக் கையாண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
ராபர்ட் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருப்பது போன்று போலியான குறுஞ்செய்தி, போலியான வங்கிக் கணக்கு ஆவணங்களை உருவாக்கியும், கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகளை எண்ணுவது மற்றும் 10க்கும் மேற்பட்ட பைகளில் ரூ.2,000 நோட்டுகள் வைத்து இருப்பது போன்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தும் நம்ப வைத்துள்ளனர்.
இது குறித்து டெய்சிராணி, பாதிரியார் ராபர்ட் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, ராபர்ட்டை போலீசார் கைது செய்து, வீடியோவில் காண்பித்த கட்டுக்கட்டான பணம் குறித்து, அது உண்மையான பணமா? கள்ளநோட்டுகளா? அல்லது கலர் ஜெராக்ஸ் நோட்டுகளா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய டெய்சிராணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவன்.. காலில் ஏறிய பின்சக்கரம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!