தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது கூழையனூர் ஊராட்சி. அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் நலன்கருதி, 1992ஆம் ஆண்டு நல்லுச்சாமி என்பவர் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர், 70 சென்ட் நிலத்தை தமிழ்நாடு அரசு பெயருக்குத் தானமாக வழங்கினார். இதனை அப்பகுதியினர் மழை காலங்களில் பெய்யும் நீரை தேக்கிவைத்து, நீர் குட்டையாக பயன்படுத்திவந்தனர். இதன்மூலம் கூழையனூர், அதன் சுற்றுப்புறங்களின் நிலத்தடி நீர்மட்டத்தின் முக்கிய நீராதாரமாகத் திகழ்ந்துவந்தது.
இதற்கிடையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, அக்குளத்தை அழித்துவருவதாக கூழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாலதிமுத்து தலைமையில், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் இன்று (நவ.23) ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில், ”குளம் உருவாக்கப்பட்ட பிறகு மல்லீங்காஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது. அடுத்தடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் 2013ஆம் ஆண்டு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4,60,000 மதிப்பீட்டில் குளத்தை ஆழப்படுத்துதல், கரையை பலப்டுத்துதல், சுற்றி மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்துவந்தோம்.
ஆனால் நிலத்தை தானமாக வழங்கிய நல்லுச்சாமியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சோனைமுத்து, மேற்படி நிலத்தை செல்வாண்டி என்பவருக்கு கிரயம் செய்து பத்திரப் பதிவு கொடுத்துள்ளார். இதையடுத்து கிரயம் பெற்ற நபர் தற்போது குளத்தின் மதகுப்பகுதி, கரைகள், நீர்வழிப்பாதை உள்ளிட்டவைகளை தகர்த்தியதோடு மட்டுமல்லாமல் முழுவதுமாக அழித்துவருகிறார்.
இதனால் குளம் இருந்த இடம் தெரியாமலேயே போய்விட்டது. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தின் பத்திரப் பதிவை ரத்துசெய்து, கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பட்டில் இருந்துவந்த குளத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முன் விரோதத்தால் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - மூன்று பேர் கைது!