தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணியன் மணக்கரைப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய துரைமுத்து, அவரது கூட்டாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் வெடிகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்தார். அவருக்குத் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கி அவரது குடும்பத்தாருக்கு அரசு வேலையும் அளித்துள்ளது.
மேலும் காவல் துறை அலுவலர்கள் அவரது வீட்டிற்குச் சென்று தொடர்ந்து ஆறுதல் கூறிவருகின்றனர். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று தூத்துக்குடியில் உள்ள ஓய்வுபெற்ற காவலர்கள் சங்கத்தினர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணைக் கண்காணிப்பாளர் கணேஷ், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.