தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் உள்கோட்டம் சார்பில் பொதுமக்கள் - காவல் துறையினரின் நல்லுறவு மேம்படும் வகையில் அணிவகுப்புப் பேரணி இன்று (நவ. 28) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் துப்பாக்கி ஏந்திய ஆயுதங்களுடன் காவல் துறையினர் கலந்துகொண்டனர்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழும் குற்றங்களை காவல் துறையினருக்கு சுலபமாகத் தகவல் தெரிவிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி குறித்து அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.
பெரியகுளம் அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக தொடங்கிய அணிவகுப்பு பேரணி வடகரை, அரண்மனைத் தெரு, ஆடுபாலம் வழியாக தென்கரை வடக்கு அக்ரஹாரம், காந்தி சிலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று இறுதியில் வடகரை காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த அணிவகுப்புப் பேரணியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்துகொண்டனர்.