தேனி: கூடலூர் அருகே உள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், ஈஸ்வரன். விவசாயியான கடந்த அக்டோபர் 28ஆம் தேதி வண்ணாத்திப்பாறை பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். தோட்ட வேலைக்காகச் சென்ற ஈஸ்வரன், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் அத்துமீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மேகமலை வனப்பகுதிக்குட்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வன விலங்குகளை வேட்டையாட முயன்றதாகவும், அதனைக் கண்டித்து கேட்ட ரோந்து பணிக்குச் சென்ற வன ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனால் ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து இச்சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விவசாயியின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், உறவினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறியதை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றனர். ஆனால், மறுநாளும் நடவடிக்கை எடுக்கவில்லை என கொட்டும் மழையிலும் ஈஸ்வரனின் உறவினர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட ஈஸ்வரனின் உறவினர்கள் நீதி கிடைக்க வேண்டும் என பல போராட்டங்களை நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்திய வன ஊழியர்கள் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தனர்.
தற்போது வன ஊழியர்களிடம் உத்தமபாளையம் நீதிபதி ராமநாதன் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேனி காவல் நிலையத்தில் தேனி மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் வனச்சரக அலுவலர் முரளிதரன், ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் வனவர் திருமுருகன், பென்னி உள்ளிட்ட 7 வன ஊழியர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் வன அலுவலர்கள் முரளிதரன், திருமுருகன், பென்னி ஆகியோரிடம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து பிறகு துணை காவல் கண்காணிப்பாளர் கூறும் போது, "முதற்கட்டமாக போலீசார் சார்பில் வன அலுவலர்களை விசாரணை செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.