தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்றுவரும் கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இதற்காகச் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் கஞ்சா பயன்பாடு அதிகமுள்ள கம்பம் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கம்பம் மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் இன்று (நவ. 11) அதிகாலை முதலே காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கம்பம் மெட்டு அடிவாரத்திலுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தில் கஞ்சா பயிரிப்பட்டிருந்ததை மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் கண்டறிந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற கம்பம் வடக்கு காவல் துறையினர், வனத் துறையினர் அங்கு பயிரிப்பட்டிருந்த கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “அழிக்கப்பட்ட கஞ்சா செடிகள் இன்னும் ஒரு வார காலத்தில் வெட்டக்கூடிய தருவாயில் இருந்தது. சுமார் 150 செடிகளில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா 500 கிலோ வரை எடை இருக்கும். அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சமாகும். இது குறித்து நிலத்தின் உரிமையாளர் விபரங்கள் சேகரித்து விசாரணை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாணவர்களிடம் கஞ்சா விற்ற இருவர் கைது!