தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிச் சீட்டு விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறதாக தொடர்ந்து காவல் துறையினருக்குத் தகவல்கள் கிடைத்து வந்துள்ளன.
இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கூடலூர், வீருசிக்கம்மாள் மண்டபம் அருகில் சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவரிடம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, கூடலூர், அழகுப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 37) எனும் அந்நபர், கேரள மாநில காருண்யா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேரள லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இது குறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் வேறு எவருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : குடி தண்ணீர் எடுக்கச் சென்ற சலவைத் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!