தேனி மாவட்டத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பெட்ரோல், டீசல் பங்க்குகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பங்க்குகளில் பெட்ரோல், டீசல் இரவு நேரங்களில் ஸ்டாக் இல்லை என அதன் உரிமையாளர்கள் கூறினர். பகல் நேரங்களில் மட்டுமே பெரும்பாலான பங்க்குகள் திறக்கப்பட்டன.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் பெரும்பாலான பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் ஸ்டாக் இல்லை என மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் பெட்ரோல் இருக்கும் பங்க்குகளை தேடி வாகன ஓட்டிகள் அலைந்து திரிந்து வருகின்றனர்.
மேலும் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 8 பெட்ரோல் பங்க்குகள் காலை முதலே அடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பங்க் உரிமையாளர்களிடம் கேட்டபோது, மதுரை மாவட்டம் கப்பலூரில் செயல்படும் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையாகவே கடந்த 2 மாதங்களாக விநியோகம் செய்யபட்டு வருகிறது. மேலும் கிராம மற்றும் நகர்புற மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் பங்க்குகளுக்கு மாதம் இவ்வளவு அளவு மட்டுமே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படும் என அளவு நிர்ணயித்துள்ளது.
குருடாயிலின் விலை அதிகரிப்பினால் பெட்ரோல், டீசல் உற்பத்தி செலவு அதிகரித்தது. இதனால் எண்ணெய் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நஷ்டத்தை தவிர்க்க பெட்ரோல், டீசல் உற்பத்தியை குறைத்து பங்க்குகளுக்கு அனுப்பி வைப்பதால் இந்த தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெல்லை அருகே வம்பிழுத்த காமெடி நடிகர்: கார் கண்ணாடி உடைப்பு