தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள் காயத்ரியை (22) காதலித்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டார். ஆனால், பெண் வீட்டாரின் சம்மதம் இல்லாமல் இருவரும் திருமணம் செய்துகொண்டதால் ராஜு மீது சேகர் குடும்பத்தினருக்குப் பகை வளர்ந்துள்ளது.
இதனால், காதல் தம்பதி சொந்த கிராமத்தைவிட்டு வெளியேறி பெரியகுளம் அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில், நேற்று ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு வந்த ராஜுவை பின்தொடர்ந்த சேகர், அவரது மகன்கள் பிரகாஷ் (26), ராஜேஷ் (24) ஆகியோர் அரிவாள் உருட்டுக்கட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அப்போது, ராஜு உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்காடிக்குள் நுழைந்துள்ளார். இருப்பினும் விடாமல் துரத்திச்சென்று கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைக்கண்ட அங்காடி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் சத்தமிட்டு தடுக்கவே அங்கிருந்து மூவரும் தப்பியோடியுள்ளனர்.
இந்தக் கொலைவெறித் தாக்குதலால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜுவை மீட்டு அங்கிருந்தவர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பெரியகுளம் காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து பெரியகுளம் வடகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மூவரையும் தேடிவருகின்றனர். மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காக இளைஞரை கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்!