தேனி: தமிழ்நாடு முழுவதும் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதியில் நடந்தது. இந்த நிலையில், தேனி மாவட்டம் போடி வட்டாரத்துக்கு உட்பட்ட சில்லமரத்துபட்டி ஊராட்சி சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
சில்லமரத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபைக் கூட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.
அப்போது, ஊராட்சி ஒன்றிய பள்ளியின் ஆசிரியர் ஒருவர், "உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் அரசு சலுகைகள் கிடைக்கும். நீங்கள் பயின்ற உங்கள் அரசுப் பள்ளியில் உங்கள் பிள்ளைகளையும் படிக்க வைத்து, தமிழ் வழிக் கல்வியை வளர்க்க வேண்டும்" எனக் கூறினார்.
இதனையடுத்து கிராம சபைக் கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களில் ஒருவர், "எங்கள் பிள்ளைகளை நாங்கள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறோம். முதலில் உங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள். உங்கள் பிள்ளைகளையே அரசுப் பள்ளியில் படிக்க வைக்காமல், மற்ற பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்கச் சொல்லி கோரிக்கை வைப்பது எந்த வகையில் நியாயம்? ஊருக்குத்தான் உபதேசம், உங்களுக்கு இல்லையா?
ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பேசி போராட்டம் செய்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஏன் உங்க சங்கத்தில் முடிவெடுக்க மறுக்கிறீர்கள்?” என கேட்டார். அவரைத் தொடர்ந்து பலரும் இதே கருத்தை முன்வைத்து பேசியதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் 3 நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: K.Ponmudi: "ஓசி" வரிசையில் "எவ இவ" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!