தமிழ்நாட்டில் சீர்மரபினர் உள்பட 68 சமுதாய உட்பிரிவுகளைக் கொண்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் டிஎன்சி என்ற இரட்டை முறை சான்றிதழை நிறுத்திவிட்டு டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழ் முறையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அச்சமுதாய மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம்:
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையம் அருகே சீர்மரபினர் சமுதாய மக்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்கக் கோரி அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் இன்று (டிச.30) செல்ஃபோன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறங்க செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது:
இதையடுத்து, செல்ஃபோன் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், தமிழ்நாடு அரசு சீர்மரபினர் மக்களுக்கு டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், காவல் துறையினர் செல்ஃபோன் டவரில் ஏறியவர்களையும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
கம்பத்திலும் ஆர்ப்பாட்டம்:
இதேபோன்று கம்பம் பகுதியிலும் தனியாருக்குச் சொந்தமான செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்த சுமார் 20க்கும் மேற்பட்ட அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ’எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் யுத்தம் செய்வோம்' - இயக்குநர் கௌதமன்