தேனி: உத்தமபாளையம் அருகே மல்லிங்காபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயத்தை நம்பியே பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மல்லிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த நபர், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் மக்களின் நலன் கருதி தனது சொந்த நிலத்தினை, கண்மாயாக பயன்படுத்திட தானமாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அந்த கண்மாய் நீரினை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியின் விவசாய தேவைக்காகவும், ஆடு மாடுகள் போன்ற கால்நடை வளர்ப்பிற்காகவும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்ட அந்த கண்மாயை, அதனை சுற்றியுள்ள நிலங்களை விலைக்கு வாங்கி பிளாட் விற்பனையில் ஈடுபட்டும் வரும் தனி நபர், வியாபார நோக்கத்திற்காக கண்மாயை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக பேரணி; காவல்துறையை அணுகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மேலும், அப்பகுதி மக்கள் இது குறித்து ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் கேட்டபோது, குண்டர்களை வைத்து அவர்களை மிரட்டுவதாகவும், 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்லும் பெண்களை வேலைக்கு வரவிடாமல் தடுப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும், கடந்த 50 வருடங்களாக மல்லிங்காபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கண்மாய் நிலம், தற்போது உள்ள அரசு வருவாய் பதிவேட்டில், கண்மாய் இல்லை என்று கூறப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், கிராமத்தில் தண்ணீர் இன்றி விவசாயம் அழிவு நிலைக்கு செல்வதாக வேதனை தெரிவித்த அப்பகுதி மக்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கண்மாயை மீட்டெடுத்து, ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பின்போது உயிரிழந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - மத்திய, மாநில் அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!