2024ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் ஜல் ஜீவன் மிஷன். இந்த திட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் 112 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் இணைப்பிற்காக விண்ணப்பிக்கும் பயனாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் புகார் தெரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பயனாளிகளின் பங்களிப்பு 10 விழுக்காடு என்ற கணக்கீட்டின் படி ரூ. 3,000, ஓர் ஆண்டிற்கான குடிநீர் வரி ரூ. 720 என மொத்தம் ரூ.3,720 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால், சில குறிப்பிட்ட ஊராட்சிகளில் கூடுதலாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவது எனது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து சில இடங்களில் பொதுமக்கள் சார்பில் பகிரங்கமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூல் செய்யும் விதமாக தொகையை நிர்ணயம் செய்து, பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் துண்டறிக்கை, ஒலிபெருக்கி மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.
இதுதவிர கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை உரிய பயனாளிகளுக்கு திருப்பி அளித்து, கூடுதல் கட்டணம் வசூலித்த ஊராட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு - வரவு வைக்கப்பட்ட தொகையை திரும்பப் பெறும் நடவடிக்கை தீவிரம்