தேனி: பெரியகுளத்தில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. நூறு ஆண்டு பழமை வாய்ந்த இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, விபத்து அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த மருத்துவமனைக்கு பெரியகுளம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியான 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் பணியாற்றிய உதவி பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இ.சி.ஜி டெக்னீசியன் உட்பட 40 பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 5 பணியாளர்களைக் கொண்டு மருத்துவமனை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், செவிலியர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் பற்றாக்குறையால், மருத்துவப் பணிகளை தூய்மை பணியாளர்கள் மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பெரியகுளம் பகுதியை சேர்ந்த முத்தையா கூறுகையில், "மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால், தூய்மை பணியாளர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளும் அவல நிலை உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டும் கொடுக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மருத்துவப் பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்பி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!