தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செவ்வாழை ராசு. இந்த நிலையில், உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் செவ்வாழை ராசு, இன்று (மே 18) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 70. தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியாகி, பிளாக் பஸ்டர் அடித்து இன்றும் நம் அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கும் திரைப்படமான ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகர் செவ்வாழை ராசு.
இதனையடுத்து இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘தாய் மனசு’ என்ற படத்திலும் செவ்வாழை ராசு நடித்தார். இவ்வாறு இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் 7 ஆண்டுகளில் 21 படங்களில் நடித்துள்ளார். இருப்பினும், கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் யதார்த்தமான நடிப்பில் வெளியாகி, பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய ‘பருத்திவீரன்’ என்ற படத்தில் 'பொணந்தின்னி' என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்தான் செவ்வாழை ராசு புகழ் பெற்றார்.
இதனையடுத்து, அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமும், தனி செக்மெண்டும் வரத் தொடங்கியது. இவரது குணச்சித்திரம் கலந்த நகைச்சுவையான நடிப்பில் 2010ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான ‘மைனா’ திரைப்படத்திலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை.
முன்னதாக, கருத்தம்மா, உளவுத்துறை, பெரிய மனுஷன், கந்தசாமி, மலைக்கோட்டை, வேலாயுதம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிலும், இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் மற்றும் அபிமன்யு சிங் உள்ளிட்ட பிரபலங்களின் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘வேலாயுதம்' படமே, செவ்வாழை ராசுவின் 100வது படம் ஆகும்.
இவ்வாறு பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து வந்த செவ்வாழை ராசு, கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று (மே 18) சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
இதனையடுத்து, செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், வருசநாட்டில் உள்ள கோரையூத்து என்னும் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும், ராசு என அவரது பெற்றோர் இவருக்கு பெயர் வைத்திருந்தாலும், நிறமாக இருந்ததால் தனக்கு ‘செவ்வாழை’ என்ற அடைமொழியை சிறுவயதிலேயே வைத்து அழைத்தார்கள் என செவ்வாழை ராசு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கடவுள் மறுப்பு திரைப்படங்களிலும், எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடிக்கவே மாட்டேன் என்பதிலும் உறுதியோடு இருந்தவர், செவ்வாழை ராசு.
இதையும் படிங்க: தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய நினைவேந்தல் நிகழ்வு - மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்திய நடிகர்கள்!