தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த செல்வம் - கலாராணி தம்பதியனருக்கு கணேஷ்குமார்(27) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணேஷ்குமார் டிப்ளமோ முடித்துவிட்டு துபாயில் வேலை செய்வதற்காக முகவர்கள் மூலம் கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளார். இந்த கரோனா தொற்றுப் பரவலால் எங்கும் வேலை கிடைக்காததால் நண்பர்கள் அறையில் தங்கியுள்ளார்.
இதனையடுத்து சில நாட்களில் கணேஷ்குமாருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் சென்று வேலை தேடிக்கொள்ளலாம் என்றிருந்த கணேஷ்குமாருக்கு போதிய மருத்துவ வசதி அங்கு கிடைக்காததால் உடல் நலிவுற்ற நிலையில் சிரமப்பட்டு வருகிறார். மேலும், நோயினால் உணவு எதுவும் உண்ண முடியாத நிலையில் இருப்பதாகவும், உடல் எடை வேகமாக குறைந்து வருவதாகவும் தன்னுடைய உடல் நிலை குறித்து பேசிய வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில், "மார்ச் மாதத்திலிருந்து எனக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது. சுற்றுலா விசாவில் வந்திருப்பதால் எனக்கு எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை. உணவு அருந்த முடியவில்லை. புற்றுநோய் அறிகுறிகள் தென்படுவதால் தாய்நாடு திரும்பிவிடுங்கள் என்று துபாய் மருத்துவர்கள் கூறுகின்றனர். என்னுடைய உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
நான்கு நாள்களுக்கு ஒரு முறை அருகிலுள்ள மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றிவருகிறேன். இரண்டு, மூன்று நாள்களில் நான் இறக்கநேரிடலாம். என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கள்" என்று தழுதழுத்த குரலில் பேசியுள்ளார்.
இந்நிலையில், கணேஷ்குமாரை மீட்டு தமிழ்நாடு அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது பெற்றோர் இன்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
"குடும்ப வறுமையின் காரணமாகவே எங்களின் ஒரே மகனை துபாய்க்கு வேலைக்கு அனுப்பினோம். வேலை கிடைக்கவில்லை நண்பர்கள் அறையில் தங்கியுள்ளேன். தற்போது உடல்நிலை சரியில்லை மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன், விரைவில் குணமடைந்து விடும் என்று கூறி வந்தான். மூன்று மாதத்திற்கு பிறகு நேற்று அவன் வெளியிட்ட வீடியோவில் தான் அவனை பார்த்தோம். அவ்வளவு மோசமான நிலையில் அவன் இருப்பான் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.
தன்னுடைய நிலையைப் பற்றி எங்களிடம் கூறக்கூடாது என அவனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறான். நாங்கள் கஷ்டப்படுவோம் என தெரிந்து அவனது நிலைமையை எங்களிடம் மறைத்து இருக்கிறான். இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் அவனை நாங்கள் துபாய் செல்ல அனுமதித்திருக்க மாட்டோம். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு கணேஷ்குமாரை எவ்வாறு மீட்பது எனத் தெரியவில்லை.
எனவே உயிருக்கு ஆபத்தான சூழலில் துபாயில் சிக்கித் தவிக்கும் தங்களது மகனை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க பேசுகின்றனர் கணேஷ்குமாரின் பெற்றோர்.
இதையும் படிங்க: போதையில் இளைஞர்கள் தகராறு: கைது செய்த காவல் துறை!