தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெ.சி. மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி நிர்வாகம் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கல்விக்கட்டணம் செலுத்தாததை காரணமாகக் கொண்டு, நேற்று (மே 04) முதல் நடைபெற்று வரும் ஆண்டுத்தேர்வை எழுத அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறி மாணவர்களின் பெற்றோர் தனியார் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தனியார் பள்ளி நிர்வாகம் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைகளில் தரையில் அமர வைப்பதாகவும், நேற்று தொடங்கிய ஆண்டு பொதுத்தேர்வில், கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வு எழுதியபோது, அவர்களைப் பாதியிலேயே தேர்வுத் தாள்களை பறித்துக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு: இந்த நிலையில், இன்று (மே 05) தேர்வு எழுத சென்ற மாணவர்கள் அனைவரையும், தேர்வு எழுதவிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதன்பொருட்டு, பெற்றோர் செலுத்தவேண்டிய தொகையை தேர்வு முடிவதற்குள்ளாக செலுத்துகிறோம் என்று கூறியும்; பள்ளி நிர்வாகம் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் தொடர்ந்து பள்ளிக் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்போம் என்று பள்ளி தரப்பினர் கூறியதாகக் கூறப்படுகிறது.
பெற்றோர் அரசுக்கு கோரிக்கை: மேலும் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லையென்றால் உங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டிச் செல்லுங்கள் என்று கூறியதால் பள்ளி மாணவர்களை கூட்டி வந்த பெற்றோர் பள்ளி வளாகத்திற்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்விக்கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்கிற தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அலுவலர் தலையிட்டு மாணவர்களைத் தேர்வு எழுத ஏற்பாடு செய்யவேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளியில் சுகாதாரமற்ற முறையில் சத்துணவு விநியோகம் - குவியும் புகார்கள்; கண்டுகொள்ளுமா அரசு?