இயற்கையான காற்று, ரம்மியமான சூழ்நிலை என மரத்தடியில் சமூக இடைவெளியுடன் சுமுகமாக அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர், தேனி மாவட்டம் - உப்புக்கோட்டை, பச்சையப்பா பள்ளி மாணாக்கர்கள். கரோனா ஊரடங்கால் பெரும்பான்மையானோர் ஆன்லைனில் கல்வி பயின்று வரும் நிலையில், அரச மர நிழலடியில் இவர்கள் படித்து வருவது பழங்கால கல்வி முறையை ஞாபகப்படுத்துகிறது.
சுமார் 550 மாணவ - மாணவிகள் பயின்று வரும் பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களே அதிகம். அதனால், ஆன்லைனில் படிக்கும் அளவுக்கு வசதி இல்லை. கிராமப்புறங்களில் பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்றுவிட்டால், வீட்டு வேலைகளையெல்லாம் அவர்களுடைய பிள்ளைகள் தான் பார்ப்பார்கள்.
இந்நிலையில், "தொலைக்காட்சி மூலம் படியுங்கள்" என்று எளிதாக சொன்ன அரசிற்கு, இவர்களைப் போன்ற ஏழை மாணவர்களின் இக்கட்டான சூழ்நிலை புரியாமல் போவது இயல்புதானே. குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஆன்லைனில் படிக்க வழியில்லாமல் விழிபிதுங்கி நின்ற போது , பச்சையப்பா பள்ளியின் நிர்வாகம் எடுத்த முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
'தெரு விளக்கு வெளிச்சத்துல முன்னேறி வருவோம்' - நரிக்குறவர் மாணவியின் சாதனை
மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளியைச் சுற்றியுள்ள கூழையனூர், குண்டல்நாயக்கன்பட்டி, மாணிக்காபுரம், போடேந்திரபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பயில்வதால், ஒரு கிராமத்திற்கு ஒரு நாட்கள் வாரியாக பிற்பகல் தொடங்கி மாலை வரை, அனைத்துப் பாடங்களையும் நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஊருக்கும் சென்று மரத்தடி நிழல், சுத்தமான காற்று, முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்புகளை நடத்தும் இவர்களின் முயற்சி குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் புவனேஸ்வரியிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள். இவர்களில் இணையதள வகுப்புகளில் பங்கேற்பதற்கு தேவையான மொபைல் போன் வசதி இன்றளவும் பலரிடம் இல்லை.
மேலும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு என்பதால், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என அனைத்து பாடப்பிரிவுகளையும், ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர்களின் அறிவுரைப்படியே மாணாக்கர்களின் இருப்பிடத்திற்குச் சென்று கல்வி கற்பித்து வருகிறோம்" என்றார்.
பிள்ளைகளின் படிப்பைக் காட்டிலும் தாலி ஒரு பொருட்டல்லவே!
இந்தக் கற்றல் சூழல் குறித்து மாணவர்கள் கூறுகையில், "லேப்டாப் இல்லை, ஃபோன் இல்லை, டிவி இல்லை, ஆனாலும் நாங்கள் படிக்கிறோம். இந்த முயற்சியால், பொதுத் தேர்வில் பங்கேற்கும் எங்களுக்கு அரசுத் தேர்வை சந்திப்பது மிகவும் எளிமையாக இருக்கிறது. எங்கள் ஆசிரியர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்" என்று வீட்டு வேலைகளுக்கிடையிலும் இவர்களின் விரல்கள் புத்தகப்பக்கங்களை தழுவுவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
கட்டுமான வசதி கிடையாது, கரும்பலகை கிடையாது, ஆனாலும் இது கசக்கவில்லை... ஆன்லைன் கல்விக்கு மாற்றாக இனிக்கிறது. கட்டணம் வசூலிப்பது, தேர்ச்சி விகிதத்தை காண்பிப்பது என கடமையை மட்டும் செய்தால் போதும் என எண்ணாமல், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இருப்பிடத்திற்கே தேடிச்சென்று பாடம் நடத்தி வரும் இந்த ஆசிரியர்களின் முயற்சி பாராட்டுக்குரியதே. இது மற்ற பள்ளிகளுக்கும் முன்மாதிரியாகட்டும்.
இதையும் படிங்க; வாசனை இழந்த ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!