கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாவட்டத்தில் கோவிட்-19 நோய் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அரசின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கையால் தேனி மாவட்டத்தின் கோவிட்-19 நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது கோவிட்-19 நோய் தாக்கம் அதிகமுள்ள, பிற மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகளால், இந்த நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, பிற மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் சிவப்பு மண்டல பகுதியிலிருந்து தேனி மாவட்டத்துக்குள் வரும் மக்கள் மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச்சாவடியில் மருத்துவக்குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீட்டுத்தனிமையில் 14 நாட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு வீட்டுத்தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க சுகாதாரம், காவல் துறை மற்றும் வருவாய்த்துறையைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுத் தனிமையிலிருப்பவர்கள் வீட்டை விட்டு, எக்காரணம் கொண்டும் வெளியே வரவே கூடாது. இவ்வாறு வீட்டு தனிமையில் இல்லாமல் பொது வெளியில் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வீட்டுத்தனிமை, நிபந்தனை விதிமீறல் செய்பவர்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் (04546 – 261093/1077) தொடர்பு கொள்ளலாம் என்றும்; மேலும் தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
'கேரள ஏலத்தோட்டங்களுக்குச் செல்ல தேனி விவசாயிகளுக்கு அனுமதி வேண்டும்'