தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி மக்களவைத் தொகுதி அதிமுக கட்சி அலுவலகத்தில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற சமூக வலைதள வீடியோக்கள் நம்பத்தகுந்தது அல்ல என விளக்கமளித்தார்.
கருத்துக்கணிப்பை மட்டுமே வைத்து முடிவெடுக்க முடியும் என்றால் தேர்தல் நடத்தத் தேவையில்லையே. கடந்தத் தேர்தலில் திமுக வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டது. ஆனால், அதிமுக வெற்றிபெற்றது. இனி எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு பொய்யானது. தவறான குற்றச்சாட்டைக் கூறிவரும் ஈவிகேஎஸ் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்தப் பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.
முன்னதாக மேகதாது அணை கட்டுவதற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் மணல் சப்ளை செய்தற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.