தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இன்று தேனியில் இஸ்லாமிய பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று நிதியுதவி வழங்கினார்.
அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மக்களுக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே பல நன்மைகளை செய்து வருகிறோம். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நன்றாக படித்து விஞ்ஞானியாக செயல்பட்டதால் தான் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தது. எனவே அனைத்து மாணவர்களும் நன்றாக கல்வி கற்க வேண்டும், அதற்காக தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் மீது வன்கொடுமை நிகழாமல் ஒரு தாய் மக்களாக இருந்து வருகிறோம். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக செயல்படுகிறது என்றார்.