தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் அதிமுக சார்பாக அமமுகவினர் தாய் கழகத்தில் இணையும் விழா இன்று நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, பேரூர் மற்றும் நகர கழக அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 5,358 நபர்கள் அதிமுகவில் மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டதாக ஓபிஎஸ் பேசினார்.
மேலும், கட்சியில் இணைந்த ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் அதிமுக கரை வேட்டிகள் மற்றும் சேலைகளை ஓபிஎஸ் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். கூட்ட நெரிசல் காரணமாக மேடை முன்பாக அதிகப்படியான தொண்டர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல சிரமங்களுக்கிடையே தொண்டர்களுக்கு வேட்டி சேலைகளை ஓபிஎஸ் வழங்கி வந்தார்.
இதன் காரணமாகக் காவலர்கள் மேடையைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு கட்டத்தில் வேட்டிகள் தீர்ந்து போக, மீண்டும் புதிதாக வேட்டிகள் கடையிலிருந்து வாங்கி வரப்பட்டு வழங்கப்பட்டது. இதற்கிடையே அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு ஓபிஎஸ் கட்சிக் கொடி பொறித்த சேலைகளை வழங்கினார்.
மேலும் அவர்களுடன் சேர்ந்து துணை முதலமைச்சருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பெண் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அதிமுக கட்சி நிறம் பொறிக்கப்பட்ட சேலைகளை வாங்கிச் சென்றதை அங்கு இருந்தவர்கள் வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்தனர். மேலும் பணியில் சீருடையிலிருந்த பெண் காவலர்கள் கட்சி சேலைகளை வாங்கிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.