தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கக்கோரி எழுந்த தன்னெழுச்சிப் போராட்டத்தின் போது அப்போதைய முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார். அவர் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி பெற்றுத் தந்தார்.
இதன் காரணமாக அவரை ஜல்லிக்கட்டு நாயகர் என அழைப்பதுண்டு. அதிமுக சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகளிலும், மேடைகளிலும் துணை முதலமைச்சரை வாழ்த்தும் விதமாக ஜல்லிக்கட்டு நாயகன் என்ற வாசகம் நிச்சயம் இடம்பெறும்.
ஜல்லிக்கட்டு நாயகரல்ல! ஜல்லிக்கட்டு வில்லன்!
இந்நிலையில் தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நாட்டு மாடு நலச்சங்கம் சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ’பூமி உருண்டை சுற்றும் வரை மலை மாடுகள் மேயும். பந்தய மாடுகள் ஓடும்; ஜல்லிக்கட்டு மாடுகள் பாயும். காளை மாடு வளர்ப்பு தடைச்சட்டம் 2019 கொண்டு வந்த ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகரல்ல; ஜல்லிக்கட்டு வில்லன்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜல்லிக்கட்டு காளை, ரேக்ளா பந்தயம், மலை மாடுகள் புகைப்படங்களும் அந்த சுவரொட்டியில் அடங்கியுள்ளன. தேனி புதிய பேருந்து நிலையம் மட்டுமின்றி கோட்டூர், தர்மாபுரி, பூமலைக்குண்டு உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக நாட்டு மாடு நலச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர் நாட்டு மாடு நலச்சங்க பிரமுகரான ஜங்கால்பட்டி கலைவாணன் என்பவரை கைது செய்து, பின்னர் பிணையில் வெளியே விட்டனர்.
இதையும் படிங்க:கூடுதல் நிதி ஒதுக்க நிர்மலா சீதாராமனை வலியுறுத்திய ஓபிஎஸ்