தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்புரத்தில் வசித்துவருபவர் முருகலட்சுமி. இன்று காலை துணி துவைத்து வீட்டின் அருகே இருந்த கொடி கயிற்றில் காயப்போடச் சென்றவர், எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மின் வயரில் உரசியுள்ளார்.
அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது, இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினரான முகமது யாசின் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இருவரை மின்சாரம் தாக்கியதைக் கண்டு காப்பாற்ற முயன்ற வேல்முருகன் மீதும் மின்சாரம் தாக்கியது. மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மூவரும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இதில் முகமது யாசின் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் முருகலட்சுமி, வேல்முருகன் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இது தொடர்பாக பெரியகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.