தேனி: போடிநாயக்கனூர் அருகே சில்லமரத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் நேற்று காலை பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து பள்ளியில் இருந்து மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த மாணவர்களைத் தேடினர். அப்போது சில்லமரத்துப்பட்டி அருகே ஒரு மரத்தடியில் 3 மாணவர்களும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். பள்ளி மாணவர்களிடம் பெற்றோர் விசாரித்த போது, அங்கு தள்ளுவண்டியில் கம்பளி போர்வை விற்பனை செய்யும் வடமாநில இளைஞர் ஒருவரை காண்பித்து, அவர் தங்களை கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறினர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் அந்த வடமாநில இளைஞரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த போடிநாயக்கனூர் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான தாலுகா காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
பின்பு அந்த வடமாநில இளைஞரையும், பள்ளி மாணவர்கள் மூவரையும் போடிநாயக்கனூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பள்ளி மாணவர்கள் 3 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் தங்களை ஒரு கறுப்பு நிற ஆட்டோவில் இளைஞர் ஒருவர் கடத்திச்சென்றதாக மாணவர்கள் கூறினர். இதையடுத்து பள்ளிக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால், அந்தப் பகுதியில் மாணவர்கள் கூறிய நேரத்தில் அப்படி ஒரு ஆட்டோ சென்றதாக கேமராவில் காட்சிப் பதிவாகவில்லை.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட வடமாநில இளைஞரிடம் காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த திலீப் (25) என்பதும், தேனி முத்துதேவன்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கம்பளி போர்வை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, தான் மாணவர்களை கடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் பள்ளி மாணவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததை, ஒரு மாணவனின் பெற்றோர் பார்த்துள்ளார். இதனால் மாணவர்கள் பயந்து தங்களை வடமாநில இளைஞர் கடத்தியதாகக் கூறி நாடகமாடியது அம்பலமானது. பின்னர் மாணவர்களிடம் இது போன்ற தவறான தகவல் கூறக்கூடாது என்றும், பள்ளிக்கு ஒழுங்காக செல்ல வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
பின்பு மாணவர்களை கடத்தியதாக கூறப்பட்ட போர்வை விற்கும் வட மாநில இளைஞர் திலீப் என்பவர் போடிநாயக்கனூர் தாலுகா காவல் நிலையத்தில் ‘தான் செய்யாத தவறுக்கு தன்னை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாகவும், தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாகவும்’ பள்ளிக்குச்செல்லாமல் கட் அடித்து விட்டு, ஊர் சுற்றிய மாணவரின் தந்தை மீது வடமாநில இளைஞர் புகார் அளித்தார்.
அந்தப் புகாரை பெற்றுக்கொண்ட போடிநாயக்கனூர் தாலூகா காவல் துறையினர் சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவனின் தந்தை பாண்டி (35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி சிறுவர்கள் கூறிய பொய்யால் ஒன்றும் அறியாத வட மாநில இளைஞர் தாக்கப்பட்டதுடன், பள்ளி மாணவனின் தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை பெண் மருத்துவரிடம் கைவரிசை.. ஜம்தாரா கும்பல் சிக்கியது எப்படி?