கோவிட் 19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, மாநிலத்தில் பொதுமக்கள் கூடும் கல்வி நிறுவனங்கள், சுற்றுலா மையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் கெ.காமக்காபட்டி பகுதியில் உள்ள காவல் துறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் கொடைக்கானலுக்கு செல்ல அனுமதியில்லை என வாகன ஓட்டிகளிடம் தெரிவிக்கப்பட்டது. உரிமங்களை சோதித்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், கரோனா வைரஸ் பரவலையும் கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் சுற்றுலா செல்வதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இந்த அலட்சியப் போக்கு ஆபத்தானது என உணர்ந்த காவல் துறை சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொடைக்கானலை வசிப்பிடமாகக் கொண்டவர்களை மட்டும் உரிய ஆவணங்களை பார்த்த பின்பு உள்ளே செல்ல காவல் துறையினர் அனுமதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் ஆறு நாள்களே ஆன பெண் சிசு எருக்கம்பால் கொடுத்து கொலை!