2018-20ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழுவினர் தேனி மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவர் துரைமுருகன் தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள், செயலர் மற்றும் இணைச்செயலர்கள் கொண்ட இக்குழுவினர் வைகை அணை, பசுமை வீடுகள், அங்கன்வாடி மையம் மற்றும் சாலைகளை ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
பின்னர் இது குறித்து பொதுக்கணக்குக் குழு தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் உள்ள அணைகள் தூர்வாரப்பட்டதாக நான் படிக்கவில்லை. தான் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த 17ஆண்டுகாலத்தில் எந்த அணையும் தூர்வாரப்பட்டதில்லை. ஒரு அணையை தூர்வாருதல் என்பது அவ்வளவு சாதாரணமான விசயம் அல்ல, அவ்வாறு அணையை தூர்வாரினால் அதில் உள்ள மண்ணை எங்கு கொண்டு செல்வது. எனவே வைகை உள்ளிட்ட எந்தவொரு அணையும் தூர்வார முடியாது. ஆய்வுப்பணிகள் திருப்திகரமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நாங்கள் சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையில் தெரியவரும் என்றார்.
மேலும், தேனி மாவட்டத்தில் தொழிற்துறை வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், நான் என்ன அமைச்சரா? ஒரு பெரிய அமைச்சர் அதுவும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-ஸிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். அதேபோல் துணை முதலமைச்சரின் மகன் தற்போது எம்.பியாக இருக்கிறார், அவரிடம் கேளுங்கள் செய்து தருவார் என்று பதிலளித்தார்.