மதங்களைக் கடந்து அனைவராலும் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே காலை எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, இனிப்பு வகைகளைப் பகிர்ந்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடும் காட்சியே ஞாபகத்திற்கு வரும். அதிலும் பட்டாசு இல்லாத தீபாவளியைக் கற்பனை செய்வதே கடினம். நாளை எங்குப் பார்த்தாலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் தான் நம் காதுகளில் கேட்கும்.
இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து பகுதிகளிலும் பட்டாசுகள் விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு கடையில் குழந்தைகளைக் கவரக்கூடிய வகையிலும், கிராம மக்களை ஆச்சரியப்படுத்தும் விதத்திலும் பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சாதாரண பட்டாசுகளைக் காட்டிலும் பேன்சி ரக பட்டாசுகளை வாங்குவதற்கு அதிக அளவிலான மக்கள் ஆர்வம் கட்டுவதாகப் பட்டாசுக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு விற்பனை நடப்பதாகக் கூறிய அவர், மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சிவகாசியில் போதிய அளவு பட்டாசு உற்பத்தியாகாமலிருந்தது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை சிறிதளவு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளாக லயன், டக், பீகாக், கிண்டர் ஜாய், டைரி மில்க், மில்கி பார், பார்பி, கிரிக்கெட் பால் வடிவில் பேன்சி ரக பட்டாசுகள் உள்ளிட்ட பல்வேறு புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்பட்டது. குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.