தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்துவருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பள்ளியைச் சுற்றி வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பள்ளிக்கு அருகிலேயே அரசு மதுபானக்கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளி மாணவ - மாணவிகள் அரசு மதுபானக்கடை திறக்கக் கூடாது எனக்கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டம் செய்த பொதுமக்கள் சுருளி அருவி - தேனி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள், பள்ளி மாணவ - மாணவிகள் கலைந்துசென்றனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், ”அரசு மதுபானக்கடை அமையக் கூடாது என வலியுறுத்தி பலமுறை அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை, ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இன்று அரசு மதுபானக்கடையை திறக்கவுள்ளனர். இதனால்தான் நாங்கள் போராட்டம் செய்தோம், அரசு இதற்கு ஒரு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!