தேனி அமமுக வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பெரியகுளம் நகர் கழக செயலாளராக பதவி வகித்து வந்தவர் பன்னீர்செல்வம்.
இவரை கடந்த சில தினங்களுக்கு முன் பொறுப்பில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பெரியகுளம் பகுதி அமமுக சார்பு அணியினர், கிளைச்செயலாளர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் ராஜினாமா செய்தவர்கள் தற்போது அமமுகவில் இருந்து விலகி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள துணை முதலமைச்சரின் பண்ணைவீட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 100க்கும் மேற்பட்ட அமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
இது தவிர பெரியகுளம் பகுதி திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.
மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற துணை முதலமைச்சர் அவர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கி வாழத்தினார்.
உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய பதவியும் அங்கீகாரமும் அளிக்கப்படும் எனவும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.