கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற தேக்கடி சுற்றுலாத் தலம். இங்கு ஆண்டுத்தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இச்சூழலில் வட மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தினந்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் சாலை வழியாகவே தேக்கடிக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் பயண நேரம் அதிகரிப்பதோடு, உடல் சோர்வும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் விதமாக மூணார், தேக்கடி போன்ற இடங்களில் புதிதாக போபி - செம்மணூர் குழுமத்தின் சார்பாக ஹெலிகாப்டர் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே மார்ச் 7ஆம் தேதி எர்னாகுளத்திலிருந்து மூணாருக்கு புதிய ஹெலிகாப்டர் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புகழ்பெற்ற தேக்கடி சுற்றுலாத் தலத்திற்கும் அச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேக்கடி அருகேயுள்ள குமுளி ஒட்டகத்தலமேடு என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எர்னாகுளத்திலிருந்து தேக்கடிக்கு அரைமணி நேரத்தில் சென்று சேரும் விதமாகப் பயண நேர கால அட்டவணைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் காலை 11 மணிக்கு எர்னாகுளத்திலிருந்து புறப்படும் ஹெலிகாப்டரானது சரியாக 11:35 மணிக்கு தேக்கடிக்கு வந்து சேரும்.
இதற்கிடையே ஹெலிகாப்டரில் பயணிக்க நபர் ஒருவருக்கு 9,500 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேக்கடி படகுத் துறை, முல்லைப் பெரியாறு அணை, கண்ணகி கோயில், மூலிகைத் தோட்டம் உள்ளிட்ட இடங்களைக் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.