நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக அடுத்தடுத்து மாணவர்கள் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரவீன், ராகுல், பிரியங்கா, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மாணவர் இர்பான் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வெங்கடேசன், சரவணன், டேவிஸ், முகமது சபி, மைனாவதி என 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. அவர்களது பெற்றோரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் 4ஆவது முறையாக நீதிமன்ற காவல் நிறைவுபெற்று மாணவர்களின் பெற்றோர்களான டேவிஸ், சரவணன், முகமது சபி, மைனாவதி ஆகிய 4 பேரும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் உடல்நலக்குறைவால் மதுரை மத்திய சிறையில் உள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஆஜர் படுத்தப்படவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், இவர்களது நீதிமன்ற காவலை நீட்டித்து வரும் டிசம்பர் 5ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சரவணன், டேவிஸ், முகம்மது சபி ஆகியோர் தேனி மாட்ட சிறையிலும், மைனாவதி மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவரின் விரல் ரேகையை ஒப்பிட்டுப் பார்க்க சிபிசிஐடிக்கு உத்தரவு!