நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர் சரவணன் டேவிஸ் ஆகியோரிடம் தேனி சிபிசிஐடி காவல் துறையினர் செப்டம்பர் 29ஆம் தேதி விசாரணை நடத்தினர்.
இதில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது உறுதியானதையடுத்து நால்வர் மீதும் ஆள்மாறாட்டம், மோசடி, ஆவணங்களை திருத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து நால்வரும் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நால்வரின் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார் தேனி நீதித்துறை விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்று விரைவு நீதிமன்ற நீதிபதி ரூபனா தெரிவித்துள்ளார்.