நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சில மாணவர்களும் அவர்களது பெற்றோரும் தேனி சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் இர்பான் ஆள்மாறாட்டம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் சில நாள்களாக தலைமறைவாகியிருந்தார். இவரை சிபிசிஐடி காவல் துறையினர் தேடிவந்தநிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் இன்று விசாரணைக்காக தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இர்பானிடம் சிபிசிஐடி காவல் துறையினர் ஐந்து நாள்கள் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இன்று மதியம் முதல் நாளை மதியம்வரை விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்தது.
இதனையடுத்து தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு மாணவன் இர்பான் அழைத்துசெல்லப்பட்டு ஆய்வாளர் சித்ராதேவி முன்னிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: தொடரும் நீட் ஆள்மாறாட்ட புகார் - சென்னை மாணவி கைது!