நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் உதித்சூர்யா என்பவர் படித்து வருவதாக சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் ஆனந்த கிருஷ்ணன் மின்னஞ்சல் வாயிலாக கல்லூரி முதல்வருக்கு கடந்த செப்டம்பர் 11,13ஆகிய தேதிகளில் புகார் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய குழு மூலம் விசாரித்ததில் அது நிரூபணமானதையடுத்து, மன உளைச்சல் காரணமாக தன்னால் படிப்பைத் தொடர இயலவில்லை என்று கல்லூரிக்கு கடிதம் அனுப்பிவிட்டு மாணவர் உதித்சூர்யா தலைமறைவாகிவினார்.
இதனையடுத்து, இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித்சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவிலக்கு காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவரைப் பிடிப்பதற்கு காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது இது சம்பந்தமாகக் கல்லூரி முதல்வரிடம் காவல் துறையினர் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில் 2019- 20ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையின் போது இருந்த குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் விவரம், உதித்சூர்யா கல்லூரியில் சேர்க்கையின் போது அவருடன் வந்தவர்கள் யார்? யார்? மேலும் முதலமாண்டு மாணவர் சேர்க்கையின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட விபரங்களை கேட்கப்பட்டுள்ளது.
பின்னர் இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் தகவல்கள் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆள்மாறாட்ட வழக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் சென்னை, மதுரை உள்ளிட்ட மருத்துவ கவுன்சிலிங் அதிகாரிகளிடமும் தேவையான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
உதித்சூர்யா மற்றும் அவருடைய பெற்றோர் ஆகியோரது வங்கி பரிமாற்றம், நீட் தேர்வு முதல் தற்போது வரை இவர்கள் தொடர்புகொண்ட தொலைபேசி விவரங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், காவல் துறையினர் சம்மன் குறித்து கல்லூரி முதல்வர் ஓரிரு நாளில் விளக்கம் அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆள்மாறாட்ட வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் மார்ஃபிங் கும்பல்!