தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த நாடாளுமன்றத் பொதுத்தேர்தல், தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் உதயநிதி ஸ்டாலினின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்", என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,"சிறை செல்வதற்கு வைகோ ஒருபோதும் அஞ்ச மாட்டார். கவலைப் பட மாட்டார். நீதிமன்றத்தில் வாதாடும்போது, இந்திய அரசாங்கத்திற்கு எதிராக இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிராக ஒருபோதும் கருத்துச் சொல்லவில்லை என கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் கூட நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாவதற்குக் கடந்த தேர்தலில் திமுகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மதிமுக சார்பில் வைகோ வேட்புமனு தாக்கல் செய்வார். வெற்றியும் பெறுவார்", என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை ஒருமாத காலம் நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தின் மூலமாக வெற்றிவாகை சூடுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.