உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பெருள்களை விற்பனை செய்வதற்கு மட்டும் அனுமதி அளித்து தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், வாரச் சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள உழவர் சந்தை மிகவும் குறுகலான இடத்தைக் கொண்டு செயல்படுவதாலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடம் என்பதாலும் தற்காலிகமாக அதை சின்னமனூர் வாரச்சந்தை பகுதிக்கு நகராட்சி அலுவலர்கள் மாற்றினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாரச்சந்தை செயல்பட அனுமதி வழங்கக்கோரியும் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் சார்பாக ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர், நகராட்சி அலுவலர்கள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், "தற்போது கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரச்சந்தை செயல்படுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே வாரச்சந்தைக்கு அனுமதி அளிக்க முடியாது. உழவர் சந்தை நாளை உடனடியாக வாரச்சந்தை பகுதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்தில் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வருகின்ற 31ஆம் தேதிக்கு பிறகு வாரச்சந்தை செயல்பட அரசு அனுமதி அளித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும்" என்று கூறப்பட்டது.
இதுகுறித்து சின்னமனூர் வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், "சின்னமனூர் உழவர் சந்தையில் வெறும் 40 கடைகள் மட்டுமே உள்ளன. இந்த வாரச் சந்தை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் ஏராளமான தொழிலாளர்கள் இங்கு பணி செய்து வருகின்றனர். தற்காலிகமாக மூடப்பட்டுள்ள இந்த வாரச் சந்தையில் பணிபுரிவோருக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாங்கள் வாழ்வாதரத்தை இழந்தோம். இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: தேனி நீதிமன்றங்கள் மூடல்