தமிழ்நாட்டில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா இன்று (டிச.11) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம், தர்மாபுரி, ,போடி உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனி மாவட்டத்தில் திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் 18ஆம் கால்வாய். இதன் மூலம் 44கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு, 4316ஏக்கர் பரப்பளவு நிலங்கள் சாகுபடி வசதி அடைந்து ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்து வந்தனர். ஆனால் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முடக்கப்பட்டு விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டிய தண்ணீர் தனிநபர் பயன்பாட்டிற்கு செல்வதாக குற்றச்சாட்டு வைத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் 18ஆம் கால்வாய் தண்ணீர் முழுவதும் விவசாயிகளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதலாக இணைப்பு கேட்ட புலிக்குத்தி, சங்கராபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நீட்டிப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், போட்டியிடலாம்.
ஆனால், மக்களுக்குத் தெரியும், எது அரசியல் கட்சி, யார் மக்களுக்காக உழைக்கிறார்கள், கடந்த காலங்களில் துன்பம் வரும்போது யார் ஓடி வந்து நமக்காக தோள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். திமுக ஆயிரங்காலத்து பயிர், சற்றேறக்குறைய நூறு ஆண்டு கால வரலாறுடைய திராவிட பேரியக்கத்தின் வலிமையான கரம் திமுக. எத்தனை பேர் களத்திற்கு வந்தாலும் தன்னுடைய இடத்தைப் பெற்று திமுக வெற்றி அடையும்" என்றார்.
இதையும் படிங்க: சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து