தேனி: தேனி மாவட்டத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, எட்டு ஆண்டுகளாக தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர் தனது தாயாருடன் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வருவதுடன், அவரை பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியுள்ளார்.
மகனின் தொல்லை தாங்க முடியாத தாயார், தன் சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோரிடம் மகனின் பாலியல் தொல்லை குறித்து தகவல் கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நான்கு பேரும் சேர்ந்து மகனின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு, 'மதுபோதையில் மகன் தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்டான்’ என நாடகமாடி சடலத்தை இறுதிச்சடங்கு செய்வதற்காக மின் மயானத்திற்குக்கொண்டு சென்றுள்ளனர்.
இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரும் சேர்ந்து அவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைக்கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா பொட்டலம் கொடுக்க முயற்சித்த தாய் கைது!!