தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கராம்பட்டி என்ற கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த பாபு (62) என்ற ஹோமியோபதி மருத்துவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார். மேலும் ஹோமியோபதி மருத்துவரான பாபு அந்த கிராம மக்களுக்கு மிக குறைந்த விலையில் மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அலோபதி மருத்துவமும், சிகிச்சைக்கும் பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவரான பாபு, ஆங்கில மருத்துவத்தின் ஊசி, மாத்திரைகளை மக்களுக்கு வழங்கி வருவதாக அதே பகுதியை சேர்ந்த ரகுராம் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் ஹோமியோபதி டாக்டரான பாபுவை கைது செய்து ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஹோமியோபதி டாக்டர் பாபு கைது செய்யப்பட்ட தகவல் ரெங்கராம்பட்டி கிராமத்தில் பரவியது. இதனையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு வந்தனர்.
இதையும் படிங்க: சிங்கம்புணரியில் 'பொன் ஏர்' பூட்டும் திருவிழா!
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு மருத்துவ சேவை அளித்து வரும் ஹோமியோபதி மருத்துவர் பாபுவை விடுவிக்கக்கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் ஆண்டிப்பட்டி டிஎஸ்பி ராமலிங்கம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஹோமியோபதி மருத்துவர் அளித்த சிகிச்சையால் இதுவரை யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை. பணம் இல்லாமல் சென்றால் கூட அவர் மருத்துவம் பார்த்து வருவதாகவும் எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில், ஹோமியோபதி மருத்துவரை போலீசார் விடுவித்தனர். பின்னர் ஹோமியோபதி மருத்துவத்தை தவிர ஆங்கில மருத்துவத்தை மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்து அனுப்பினர்.
ஹோமியோபதி மருத்துவர் பாபுவை விடுவித்ததும் மக்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டு கொண்டாடினர். ஆபத்தில் இருந்து தங்களை காத்த மருத்துவரை காவல் நிலையத்தில் இருந்து போராட்டி மீட்ட மக்களின் செயலை கண்டு போலீசாரே ஒரு நிமிடம் நெகிழ்ச்சி அடைந்தனராம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: ஃப்ரீ பையர் விளையாட்டு மோகம்.. சென்னை சிறுவன் செய்த விபரீத செயல்!