தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்படுகிறது. இளங்கலை இயற்பியல், கணிதம், வணிகவியல் மற்றும் பொருளாதாரம் என பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வந்த இக்கல்லுரியில் ஏழ்மையில் உள்ள மாணவ, மாணவியரும் கல்வி பயின்று வந்தனர். இதனைத்தொடர்ந்து 2009ஆம் ஆண்டு கோட்டூர் பகுதியிலும் மதுரை காமராஜர் பல்கலை.யின் உறுப்புக்கல்லூரி செயல்பட தொடங்கியது. இதேபோன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களிலும் 6 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி மற்றும் கோட்டூர் ஆகிய இரு உறுப்புக் கல்லூரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால் 2019 - 20 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரியில் சென்று படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி விரைவில் விண்ணப்ப படிவங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.