தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தெப்பம்பட்டி, கணேசபுரம், சித்தார்பட்டி, நடுக்கோட்டை, மூனாண்டிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, ராஜதானி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் மருகுப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. இது வாசனை திரவியங்களுக்கும், மருத்துவத்திற்கும் அதிகமாக பயன்படுகிறது. இதனால் எப்போதும் தேவை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மருகுப் பூ சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளைகின்ற மருகுப் பூக்களை தேனி மாவட்டமின்றி திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற பிற மாவட்டங்களுக்கும் கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், மார்க்கெட்டில் விலைகுறைவாக போவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ராஜபாண்டி கூறுகையில், "மருகுப் பூ சாகுபடி செய்வதற்கு நடவு, களை எடுத்தல், உரமிடுதல் மற்றும் பராமரிப்புக் கூலி என ஏக்கருக்கு ரூ.1லட்சத்திற்கு மேல் செலவாகிறது. தற்போது மருகுவின் விலை கிலோவிற்கு ரூ.10-யில் இருந்து ரூ.15 வரை மட்டுமே கிடைக்கிறது. இதனால் ஏக்கருக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்படுகிறது. லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் மருகு சாகுபடி செய்தோம். ஆனால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது", என்றார்.