தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி அனைத்து இடங்களிலும் தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திலும் நேற்று முதல் பரவலாக பெய்து வரும் தொடர்மழையால் முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் இன்றிரவு 8 மணியளவில் 53 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியான தலையாறு அருவியில் பெய்துவரும் தொடர்மழையால் இன்று காலையில் 45 கன அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 181அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணையின் முழுக்கொள்ளளவான 57அடியை எட்டிவிடக்கூடும் என்பதால் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, டி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, சிவஞானபுரம் உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளாதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.
எனவே கரையோர பகுதி மக்கள் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ, மஞ்சளாற்றின் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.