தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், தேவதானப்பட்டி அருகே 57 அடி முழு நீர்மட்ட அளவான மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் 35 அடியிலிருந்து 47 அடியை எட்டியது.
இந்நிலையில், அக்டோபர் 23ஆம் தேதி மாலை 6 மணியளவில் அணையின் நீர் மட்டம் 53 அடியை எட்டியதையடுத்து, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 55 அடியை எட்டியது.
இதனால், கெங்குவார்பட்டி, டி. கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்ட அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு அபாய சங்கு எழுப்பப்பட்டு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, அணையின் நீர் இருப்பு 435.32 மி. கனஅடியாக உள்ளது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பொதுமக்கள் யாரும் மஞ்சளாற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளைக் குளிக்கவைக்கவோ வேண்டாம். மேலும் ஆற்று கரைப்பகுதிகளை கடக்கவும் வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.