தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலணியைச் சேர்ந்தவர் சிவனேசன் (32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் செல்வம் (46) அவரது மனைவி செல்வி (41) தாய் ஈஸ்வரிக்கும் (71) குடும்ப பிரச்னை இருந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு செல்வத்தின் வீட்டிற்கு வந்த சிவனேசன் அங்கிருந்த மூதாட்டி ஈஸ்வரியை வெட்டிக் கொலை செய்தார். இதனைத் தடுக்க வந்த செல்வம் அவரது மனைவி செல்வியையும் அரிவாளால் வெட்டினார்.
இதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கூடலூர் காவல் துறையினர் செல்வத்தை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி கீதா, மூதாட்டியை கொலைசெய்த குற்றத்திற்காக சிவனேசனுக்கு ஆயுள் தண்டனை, செல்வி, செல்வத்தை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ஐந்து ஆயிரம் அபராதம், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஐந்தாயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார்.
அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்போடு காவல் துறையினர் சிவனேசனை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மது அருந்தியவரை தட்டிக் கேட்டதால் கத்திகுத்து - கல்லூரி மாணவர் கைது