தேனி: தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சுற்றியுள்ள மலையடிவாரப் பகுதிகளில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. அப்பகுதிகளில் வாழும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை, மாங்காய், கப்பைக் கிழங்கு, முந்திரி பருப்பு உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். மலையடிவாரம் என்பதால், தேவாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவாரம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மக்னா யானை பொதுமக்களை தாக்கியது. அதேபோல் விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. இந்த மக்னா யானை தாக்கி விவசாயிகள் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், தேவாரம் பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் மக்னா யானை நடமாட்டம் காணப்படுவதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நேற்று(ஏப்.29) தேவாரம் மூனாண்டிபட்டி அருகே உள்ள ரங்கநாதன் கோவில் மலை அடிவாரத்தில் மக்னா யானை நடந்து செல்வதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் பதறியடித்து தப்பியோடினர்.
இப்பகுதியில் பலா, கப்பைக்கிழங்கு, தென்னை போன்றவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளதால், அதை உண்பதற்காகவும், தண்ணீர் தேடியும் யானை வந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். மக்னா யானை சுற்றித் திரிவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்னா யானை மீண்டும் வந்ததால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.