மதுரை-தேனி மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2010 ஆம் ஆண்டே இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்த கதியில், அகல ரயில் பாதைப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ரூ.445.46 கோடி செலவில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் இன்று மாலை பல்வேறு திட்டப்பணிகளோடு மதுரை-தேனி ரயில் பயணத்தையும் தொடங்கி வைத்தார். இதற்கான விழா மதுரை சந்திப்பிலுள்ள 6-ஆவது நடைமேடையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக கூட்டுறவுத்துறை முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன் ஆகியோர் கொடியசைத்து ரயிலைத் தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்ட ரயில்வே உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 6.45 மணியளவில் பயணத்தைத் தொடங்கிய மதுரை-தேனி ரயிலில் செல்வராஜ் லோகோ பைலட்டாகவும், குபேந்திரன் உதவி லோகோ பைலட்டாகவும் பணியாற்றினர். உதவி லோகோ பைலட் குபேந்திரன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவன். தற்போது என்னுடைய சொந்த ஊருக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ரயிலில் நான் ஓட்டுநராகப் பணியாற்றுவது பெருமையாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பாதை மீட்டர் கேஜ் ஆக இருந்த நிலையில், தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு பயணம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பாதை வழக்கமான பிற ரயில் பாதையைப் போன்றது அல்ல. ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் மலையில் ஏறி இறங்க வேண்டும். நிறைய தமிழ்த் திரைப்படங்களில் இந்தப் பகுதி இடம் பெற்றுள்ளது. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட இந்தப் பாதை மிக சவால் நிறைந்ததாகும். இந்த பாதையில் சோதனை ஓட்டத்தை இரண்டு மூன்று முறை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளோம்.
ரயில் ஓட்டுநர் பணியைப் பொறுத்தவரை எந்த பாதையாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது சொந்த ஊரில் பசுமை நிறைந்த வயல்கள், மலைகளுக்கு நடுவே பயணிப்பது மன நிறைவளிப்பதாகும்.
இந்த ரயில் பாதை பொதுமக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் பேருந்துக் கட்டணத்தை ஒப்பிடும்போது, இந்த ரயிலின் கட்டணம் மிக மிக குறைவானதாகும். அதே போன்று நேரமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகும். அதுமட்டுமன்றி, மிகப் பாதுகாப்பான பயணமாகவும் உணர முடியும்' என்றார்.
இதையும் படிங்க : பூவரசம் பூ பூத்தாச்சு...மீண்டும் கிழக்கே போகும் ரயில்: தேனி-மதுரை ரயில் சேவையின் சிறப்புகள்!